பாகிஸ்தான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் முடிந்து பல நாட்களாகியும் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் அதிக இடங்களை கைப்பற்றிய பாகிஸ்தான் மக்கள் கட்சி இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
முதலில் அக்கட்சியின் துணை தலைவரான மக்தூம் அமின் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் , திடீர் திருப்பமாக பெனாசிர் பூட்டோவின் கணவரும் , பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆஸிப் அலி சர்தாரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின.
இதற்கு தோதாக சர்தாரி மீதிருந்த கடைசி ஏழு ஊழல் வழக்குகளும் நேற்று வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில் , தாம் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால், இடைத்தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும்வரை தனது சகோதரியை இடைக்கால பிரதமராக நியமிக்க சர்தாரி முடிவு செய்துள்ளதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் ,இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, அடுத்த வாரம்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனால் பாகிஸ்தான் பிரதமர் யார் என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.