லாசா கலவரத்தை தொடர்ந்து திபெத்திற்கு வெளிநாட்டவர்கள் செல்ல சீனா தடை விதித்துள்ளது.
சீன அரசை எதிர்த்து லாசாவில் கடந்த 15 ம் தேதியன்று புத்தத் துறவிகளும், திபெத்திய மக்களும் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் திபெத்தியர்கள் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சீனப் படையினருடன் கடும் மோதல் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தை அடக்க சீனப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானார்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து திபெத்தில் சீன அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளன.இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சீன அரசு அங்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பியுள்ளது.
இந்நிலையில் , திபெத்தியர்களது போராட்டம் காரணமாக வெளிநாட்டவர்கள் யாரும் அங்கு செல்ல சீன அரசு தடை விதித்துள்ளது.மேலும் ஏற்கனவே திபெத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத்தில் கடந்த 20 ஆண்டுகளாக, தலாய் லாமா தலைமையில் திபெத்தியர்கள் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.