திபெத்தில் அமைதி நிலவினாலும், பதட்டநிலை தொடர்கிறது. லாசா உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புத்த மதத்தினர் அதிகம் வசிக்கும் திபெத்தை 1950ம் ஆண்டு சீனா ஆக்ரமித்தது. திபெத் விடுதலைக்காக குரல் கொடுத்த புத்த மத தலைவர் தலாய் லாமா அந்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். தற்போது இவர் இந்தியாவின் தர்மசாலா நகரில் வசிக்கிறார்.
விடுதலை கோரி தலாய் லாமா ஆதரவாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் திபெத் தலைநகர் லாசாவில் புத்த பிட்சுகளும், தலாய் லாமா ஆதரவாளர்களும் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தின் போது சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாக சீன அரசு தெரிவிக்கிறது. ஆனால், நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் தலாய் லாமா கோரியுள்ளார்.
கடந்த வாரம் கலவரம் ஏற்பட்ட லாசா நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு புதிதாக வன்முறை ஏதும் ஏற்படவில்லை.
ஆனால், சிச்சுவான் மற்றும் கான்சு மாகாணத்தில் திபெத்தியர்கள் பலர் நேற்று முன்தினம் ஊர்வலம் சென்றனர்.சிச்சுவான் மாகாணத்தின் அபா நகரில் ஊர்வலம் சென்றவர்கள் போலீஸ் நிலையத்தின் மீதும், மார்க்கெட் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கான்சு மாகாணத்தின் மாச்சு நகரில் ஊர்வலம் சென்றவர்கள் சீனர்களின் கடைகள் மீது கல்லெறிந்தனர். சில கடைகளை தீ வைத்து கொளுத்தினர்.
கலவரக்காரர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினால், ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நேரத்தில் பிரச்னை கிளம்பும் என்பதால், சீன அரசு இந்த விஷயத்தில் பொறுமையை கடைபிடித்து வருகிறது.
லாசா நகரில் போராட்டம் நடத்தியவர்கள், பொதுமக்கள் பலரை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு அமைதி போக்கை தான் கடைபிடிக்கிறது. ஆனால், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என லாசா கவர்னர் எச்சரித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியை படம் பிடிக்க முன்கூட்டியே வந்துள்ள ஹாங்காங் போட்டோகிராபர்கள் சிலர், திபெத்துக்கு சென்று அங்கு நடந்த சம்பவங்களை படம் பிடித்ததற்காக கண்டனம் செய்யப்பட்டுள்ளனர்.
திபெத் செல்ல முயன்ற மற்ற வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் திபெத்தியர்கள் அந்நாட்டு தலைநகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஐ.நா., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமான திபெத்தியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.