இராக்கில் உள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாபெரும் வெற்றிக்கான வாசற்கதவு திறக்கப்பட்டுள்ளது என்று இராக் மீதான படையெடுப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் உரையில் அதிபர் புஷ் குறிப்பிட்டுள்ளார்.
அல்கைதாவை விரட்டியடிக்க அமெரிக்கர்களுடன் அரபுக்கள் இணைந்த ஒரு களமாக இராக் மாறிவிட்டது என்றும் ஒசாமா பின் லாடனுக்கு எதிரான அரபுக்களின் முதலாவது பேரெழுச்சியை உலகம் இராக்கில்தான் கண்டது என்றும் அதிபர் புஷ் தெரிவித்தார்.
இராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் தேசிய ஒற்றுமைக்காக குரல் எழுப்பப்பட்டுள்ளதோடு தீவிரவதக் கோட்பாடுகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.
சுமார் 400 பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டார்கள். ஆனாலும் பிரதான சுனி அரபு பிரிவினரும் கடும்போக்கு மதகுரு மொக்ததா அல் சத்ரை பின்பற்றும் ஷியா பிரிவினரும் இந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தார்கள்.
உட்பூசல்களைத் தள்ளிவைத்துவிட்டு தேசிய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க இராக்கின் அரசியல்வாதிகள் தயாரா என்ற கேள்வியை இந்தப் புறக்கணிப்பு எழுப்பியிருப்பதாக எமது பிபிசியின் அரபு விவகாரங்களுக்கான ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்