மலேசிய பிரதமர் தன் மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக இருந்தவருக்கு மீண்டும் பதவி கொடுக்காததை தொடர்ந்து அவர் தன் கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
மந்திரி பதவி கிடைக்காதவர்கள்
மலேசியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக ஆட்சி அமைத்து இருக்கும் பிரதமர் படாவி, பழைய முகங்களுக்கு மீண்டும் பதவி கொடுக்காமல் புதுமுகங்களுக்கு பதவி கொடுத்து இருக்கிறார். மந்திரி பதவி கிடைக்காமல் போன பல பிரபலங்களில் முன்னாள் உள்துறை மந்திரி ரட்சி ஷேக் அகமதுவும் ஒருவர். இவர் மந்திரியாக மட்டும் அல்லாமல், ஆளும் கட்சியான உம்னோ வின் பொதுச்செயலாளராகவும் இருந்து வந்தார்.
ஆளும்கூட்டணியில் பிரதான பெரிய கட்சியான உம்னோ எனப்படும் யுனைடெட் மலாய்ஸ் நேஷனல்ஆர்கனைசேஷன்(ஐக்கிய மலாய் தேசீய அமைப்பு)கடந்த தேர்தலில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியை திரட்ட முடியாமல் போனது. இதனால் கட்சிக்கு புத்துயிர் ஊட்டவேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் படாவி பழையவர்களை விட புதுமுகங்களுக்கு மந்திரி பதவிகளை வாரி வழங்கி இருக்கிறார். இது பதவி கிடைக்காத பழைய பிரபலங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி பதவி ராஜினாமா
மந்திரி பதவி கிடைக்காத ரட்சி ஷேக் அகமது, கட்சி பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். மந்திரியாக இல்லாமல், பொதுச்செயலாளர் பதவியில் சிறப்பாக செயல்பட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
மந்திரி பதவி கொடுக்காததால் தான் நீங்கள் கட்சிப்பதவியை ராஜினாமா செய்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவர் பதில் அளித்தார்.
கட்சியில் பிளவா?
ராஜினாமா கடிதத்தை படாவி ஏற்றுக் கொண்டார் என்று ரட்சி கூறினார். அவர் பதவி விலகியது கட்சியில் பிளவு ஏற்பட்டதற்கான அறிகுறியா என்று என்று நிருபர்கள் கேட்டபோது அதை அவர் மறுத்தார். கட்சி பிளவுபடும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நீண்டகாலம் வர்த்தக மந்திரியாக இருந்த ரபீதா அஜீஸ் க்கும் இந்த முறை மந்திரிபதவி கிடைக்கவில்லை.
கட்சியில் அனுபவம் வாய்ந்த பழம் பெரும் எம்.பி.க்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்படாததால் அவர்கள் கட்சியை பிளவு படுத்த முயற்சி செய்யலாம் என்று கூறப்படுகிறது.
கட்சி தாவத் தயார்
இதற்கிடையில் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் துணைப்பிரதமருமான அன்வர் இப்ராகிம் ஆளும்கட்சியில் உள்ள சில எம்.பிக்கள் கட்சி தாவ தாயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
சபா சரவாக் பகுதிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மத்தியில் கட்சி மாறும் எண்ணம் அதிகமாக உள்ளது. அங்கு உள்ள பலர் எங்களை அணுகி உள்ளனர். எத்தனை பேர் கட்சி மாற விரும்புகிறார்கள் என்பதை இப்போது நான் கூறமுடியாது. (அவர்கள் எண்ணிக்கை 5-க்கு மேல் இருக்குமா என்று நிருபர்கள் கேட்டபோது) அவர்கள் எண்ணிக்கை 5-க்கும் மேல் இருக்கும்.(அவர்கள் எண்ணிக்கை 10-க்கும் மேல் இருக்குமா என்று கேட்டபோது அதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
இவ்வாறு இப்ராகிம் அன்வர் கூறினார்.
அவரது கெடிலான் ரக்யத் கட்சி(மக்கள் நீதி கட்சி) மிகப்பெரிய எதிர்க்கட்சியாக வெற்றிபெற்று உள்ளது.