சீனாவில் திபெத்துக்கு சுதந்தரம் கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திபெத்தில் அமைதி நிலவிய போதிலும், அதன் அண்டை மாநிலங்களில் கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது. கலவரத்தை ஒடுக்குவதற்காக ராணுவம் விரைந்தது.
24 பேர் கைது
தனி நாடாக இருந்த திபெத், பல ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுடன் இணைக்கப்பட்டது. அதை எதிர்த்து நடந்த புரட்சி தோல்வி அடைந்தது. அந்த புரட்சியின் 49-வது ஆண்டு தினம் கடந்த 14-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பிறகு கலவரமாக வெடித்தது. கலவரத்தை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். இதில் 100 பேர் பலியானதாக கூறப்படுகிறது. கலவரத்தில் ஈடுபட்ட 170 திபெத்தியர்கள் போலீசாரிடம் சரண் அடைந்தனர். மேலும் 24 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திபெத் தலைநகர் லாசாவில் இப்போது அமைதி நிலவுகிறது. ஆனால் கான்சு, சிச்சுவான் ஆகிய அண்டை மாநிலங்களில் கலவரம் பரவி உள்ளது. கான்சு மாநிலத்தில் கான்னான் எனப்படும் சுயேச்சை பகுதியில் உள்ள ஷியாகே, மாகு, லுகு, ஜோனே, ஹேசுவோ ஆகிய நகரங்களில் உள்ள கடைகள், அரசாங்க கட்டிடங்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
கூடுதல் ராணுவம் விரைந்தது
சிச்சுவான் மாநிலத்தில் திபெத்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கலவரம் நடந்தது. தீ வைப்பு, கடைகளை கொள்ளையடித்தல் ஆகிய சம்பவங்களில் கலவரக்காரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கலவரத்தை ஒடுக்குவதற்காக கூடுதல் ராணுவத்தை சீன அரசாங்கம் அனுப்பி உள்ளது. கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு சாலைகளில் விரைந்ததாக பி.பி.சி. ரேடியோ செய்தி வெளியிட்டு உள்ளது. கலவரக்காரர்களை ஒடுக்கும் பணியை ராணுவம் முடுக்கி விட்டது.
பேச்சுவார்த்தை நடத்துங்கள்
இதற்கிடையில் தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிகாரி டாம் காசே கூறுகையில், தலாய் லாமா திபெத்துக்கு விடுதலை வேண்டும் எனறு கோரவில்லை. அவர் திபெத்தியர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தான் வேண்டும் என்று கேட்கிறார். எனவே சீன அரசாங்கம் தலாய் லாமாவுடன் அல்லது அவரது பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இங்கிலாந்து வர இருக்கும் தலாய் லாமா வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் கூறி இருக்கிறார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா வரவேற்று உள்ளது.
போப்ஆண்டவர் கோரிக்கை
இதற்கிடையில், திபெத்தில் அமைதி ஏற்படுத்தவும் திபெத்தியர்களின் துயரை துடைக்கவும், சீனா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போப் ஆண்டவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது:-
வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது. அது பிரச்சினையை மேலும் பெரிதாக்க தான் உதவும். பேச்சுவார்த்தைக்கான வழியை தேர்ந்து எடுக்கும் வகையில் அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்த உதவும்படி இறைவனை பிரார்த்திக்கிறேன். அந்த மக்கள் படும் துயரத்தை பார்த்து ஒரு தந்தையாக என் மனம் வேதனைப்படுகிறது.
இவ்வாறு போப் ஆண்டவர் கூறி இருந்தார்.