இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி இன்று புத்த மதத் தலைவர் தலாய் லாமாவைச் சந்தித்தார்.
திபெத் தலைநகர் லாசாவில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மூளையாக இருந்து தலாய் லாமா செயல்பட்டு வருகிறார் என்று சீன அரசு குற்றம்சாட்டியுள்ள சூழலில், தலாய் லாமாவைச் சந்தித்த பெலோசி, திபெத்தின் தற்போதைய நிலைமை அமெரிக்காவுக்கு கவலையளிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமாவைச் சந்திக்கக் கூடாது என்று பெலோசிக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், அவரைச் சந்தித்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தர்மசாலாவில் தலாய் லாமாவை பெலோசி சந்தித்துப் பேசிய போது, அவருடன் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் உடன் இருந்தனர்.
சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தை தனிநாடாக அறிவிக்க கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்தி சுமூகதீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.