பிரான்ஸ் வைத்துள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கையை முந்நூறுக்கும் கீழே குறைக்க எண்ணம் கொண்டுள்ளதாக பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸி கூறுகின்றார்.
அப்படி நடந்தால், அது பறந்து சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதங்களைப் பொறுத்த அளவில் பிரான்ஸின் வலிமையை மூன்றில் ஒரு பங்காக குறைத்துவிடும். எஞ்சுகின்ற அணுகுண்டுகளில் பெரும்பான்மையானவையும் நீர்மூழ்கிக் கப்பல்களில் வைக்கப்பட்டிருக்கும்.
இருந்தபோதும், இந்த ஆயுதக் குறைப்பை, இராணுவ செலவினங்களை மீளாய்வு செய்யும் அவசியம் காரணமாகத்தான் தான் முன்மொழிவதாகவும், பிரான்ஸ் சுயமாக அணுக் குண்டு வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை என்றும் சர்கோசி வலியுறுத்தினார்.
ஒரு தேசத்தின் ஆயுள் காப்பீடு அதுதான் என்று அவர் வருணித்தார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலிருந்து புதிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை ஐரோப்பா எதிர்கொள்கிறது என்று எச்சரித்த சர்கோசி, இரானை மட்டும் பெயர் சொல்லி குறிப்பிட்டார்