திபெத்தில் கலவரம் நடைபெற்று வருவதன் காரணமாக, சீன ஒலிம்பிக் போட்டியை புஷ் புறக்கணிக்க மாட்டார் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது.
திபெத்தில் கலவரம்
`உலகின் கூரை' என்று அழைக்கப்படும் திபெத் தனி நாடாக இருந்து வந்தது. அந்நாட்டை சீனா பல ஆண்டுகளுக்கு முன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதுமுதல் திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவுடன் திபெத் இணைக்கப்பட்டதை எதிர்த்து நடந்த புரட்சி தோல்வி அடைந்த தினம் கடந்த 14-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது திபெத் தலைநகர் லாசாவில் சீனாவுக்கு எதிராக கலவரம் வெடித்தது. பின்னர் அருகில் உள்ள கான்சு, சிச்சுவான் மாகாணங்களுக்கும் கலவரம் பரவியது. கான்சுவில் உள்ள ஷியாகே, மாகு, லுகு, ஜோனே போன்ற நகரங்களில் கடைகள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
பல இடங்களில் கலவரக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் பலியானார்கள். மேலும் திபெத்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களுக்கு சீனா கூடுதல் ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது.
வன்முறை சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்து விட்டதாக சீனா கூறி உள்ளது. ஆனால் 100-க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத் தலைவர்கள் தெரிவித்தனர்.
புஷ் புறக்கணிப்பு இல்லை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சீனாவில் அடுத்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை புறக்கணிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி புஷ்சுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் அந்த கோரிக்கையை புஷ் நிராகரித்து விட்டார். திபெத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஜனாதிபதியின் பயணத்தை பாதிக்காது என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டானா பெரினோ கூறினார்.
ஒலிம்பிக் என்பது அரசியல் நிகழ்ச்சி அல்ல. விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிப்பதற்கான ஒரு போட்டி என்பதுதான் புஷ்சின் நிலை என்று அவர் தெரிவித்தார்.
பொறுமை காக்க வேண்டும்
திபெத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பற்றி அமெரிக்கா பெரிதும் கவலை அடைந்து உள்ளது. இதுபற்றி சீன அதிபரிடம் புஷ் தெளிவாக பேசி இருக்கிறார் என்றார் அவர்.
அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீன் மெக்கோர்மெக்கும் இதே கருத்தை எதிரொலித்தார்.
தலாய் லாமாவை அமைதியின் மனிதராக நாங்கள் நம்புகிறோம். அவருடன் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கலவரத்தை ஒடுக்கும் பிரச்சினையில் சீன அரசு பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை
அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலிசா ரைஸ், சீன வெளியுறவு மந்திரி யாங்கூடன் பேசினார். திபெத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கவலைப்படுவதாகவும், சீன அரசு போராட்டக்காரர்கள் மீது பொறுமை காட்ட வேண்டும் என்று அவர் அப்போது கூறினார்.
தலாய் லாமாவுடன் பேசுமாறு பல ஆண்டுகளாக சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அவர் திபெத்துக்கு சுதந்திரம் கோரவில்லை. கலாசார தன்னாட்சி அதிகாரம்தான் கேட்கிறார். எனினும் இப்பிரச்சினையில் அனைத்து தரப்பினரும் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கண்டலிசா அப்போது கூறினார்.
சீனா ஒப்புதல்
இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்ட திபெத்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை சீன அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் அபா கவுன்டியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 திபெத்தியர்கள் காயம் அடைந்தனர் கலவரத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர் என்று சீன அரசு கூறி உள்ளது.