பாகிஸ்தான் புதிய பிரதமர் பதவிக்கான வேட்பாளராக யூசுப் ரஸா கிலானி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடித்து வந்த நிலையில் , பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணை தலைவரான யூசுப் ரஸா கிலானியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரும் , படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆஸிப் அலி சர்தாரிதான் தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாததால் , அவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதில் சட்ட ரீதியான சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாகவே யூசுப் கிலானி அப்பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.கிலானி பாகிஸ்தான் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவிக்கும் பிரதமர் பதவிக்கான வேட்பாளருக்கு , பிஎம்எல் ( என் ) கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் அறிவித்துவிட்டதால் , பிரதமராக கிலானி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.