பாகிஸ்தான் புதிய பிரதமராக யூசுப் ரஸா கிலானி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு அதிபர் பர்வேஷ் முஷாரப் பதவிப் பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.பதவியேற்பு விழாவில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் சர்தாரி மற்றும் முக்கிய கூட்டணி கட்சித் தலைவரான நவாஸ் ஷெரீப் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் , தொண்டர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
கிலானி பதவியேற்று முடித்ததும் , பெனாசிர் பூட்டோ வாழ்க என பாகிஸ்தான் மக்கள் கட்சி தொண்டர்கள் கோஷமிட்டனர்.
55 வயதாகும் கிலானி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நேற்று முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கிலானிக்கு ஆதரவாக 264 வாக்குகள் கிடைத்தன.
அவரை எதிர்த்து இப்பதவிக்கு போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் சவுத்ரிக்கு 42 வாக்குகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.