இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்திட இன்னும் பல மாதங்கள் கால அவகாசம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒப்பந்தத்தை விரைவாக செயல்படுத்திட வேண்டும் என இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தி வந்தது.
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள பிரணாப் , நேற்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலிசா ரைஸ்சை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை , வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
35 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது , இரு நாடுகளுக்கு இடையேயான அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆர்வமாக உள்ளபோதிலும், இவ்விஷயத்தில் காலக் கெடு எதையும் அமெரிக்கா விதிப்பதை இந்தியாவால் ஏற்க முடியாது என்றும் பிரணாப் தெரிவித்தார்.
மேலும், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வரை , இது விஷயத்தில் இந்தியாவால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் புஷ்ஷிடம் தாம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக , சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரணாப் கூறியிருந்தார்.
இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்து அமெரிக்கா தற்போது தனது நிர்ப்பந்தத்தை கைவிட்டு, மேற்கூறிய ஒப்பந்தத்தை செயல்படுத்திட இன்னும் பல மாதங்கள் அவகாசம் இருப்பதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டானா பெரினோ , " இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை " என்பதை சொல்ல இன்னும் பல மாதங்கள் இருப்பதாக கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் , ஜூலை மாதம் வரையே பாராளுமன்றம் நடைபெறும்.அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றுவிடுவார்கள் என்பதாலேயே , அமெரிக்கா இவ்விஷயத்தில் அமெரிக்கா , இந்தியாவை அவசரப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.