திபெத்தியர்களுக்கு எதிராக சீனா தனது பாதுகாப்புப் படைகளை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலிடம் தனது கவலையைத் தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன், திபெத்தியர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக சீனா தனது பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், இதனால் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், கருத்து சுதந்திரம் மற்றும் அமைதி முறையிலான போராட்டங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதியும், ஸ்லோவேனியாவின் தூதருமான ஆண்ட்ரெஜ் லோகர் வலியுறுத்தியுள்ளார்.
திபெத் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமாகவே சீனா தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் ஐ.நா. சபை பிரதிநிதிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.