அமெரிக்க நிதியமைச்சர் ஹென்றி பால்சன் அடுத்த வாரம் சீனா செல்கிறார்.
திபெத்தில் அண்மையில் வெடித்த கலவரத்தை அடக்க சீன ராணுவம் கடுமையான அடகு முறைகளை மேற்கொண்டது.
இதற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.மேலும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சீன அதிபர் ஜின்டாவோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தலாய் லாமாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி திபெத் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால் அதனை ஏற்க ஜின்டாவோ மறுத்துவிட்டார்.
அத்துடன் திபெத் விவகாரத்தில் அமெரிக்கா உட்பட உலகின் எந்த ஒரு நாடும் தலையிடுவதை சீனா விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், அரசு முறை பயணமாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஹென்றி பால்சன் அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார்.
சுற்றுப்புற சூழல் விவகாரத்தில் ஒத்துழைப்பு ஏற்படுத்திக் கொள்வது குறித்து இரு நாடுகளுக்குமிடையே கடந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து சீனத் தலைவர்களுடன் ஹென்றி பால்சன் விவாதிக்க உள்ளதாக் வெள்ளைமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.