பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயந்து பணிக்கு வராமல் நீண்ட நாட்களாக விடுப்பில் இருந்த 50 போலீஸ்காரர்கள் அதிரடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியான 'ஸ்வாத் ' பள்ளத்தாக்கு பகுதியில் பழங்குடியினத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.இங்கு தாலிபான் ஆதரவு தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம்.' ஸ்வாத் ' ஏறக்குறைய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது.
இந்நிலையில் ,கடந்த அக்டோபர் மாதம் இங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது.இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் ' ஸ்வாத் ' உள்ளூர் காவல் நிலையங்களில் பணியில் இருந்த போலீஸார் பலரை பிடித்துச் சென்று, அவர்களது தலையை வெட்டிக் கொன்றனர்.
இதனால் அச்சமடைந்த ஏராளமான போலீஸார் , தங்களது மேலதிகாரிகளுக்கு எதுவும் தெரிவிக்காமல் வேலையைவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.இவ்வாறு வேலையை விட்டுவிட்டு ஓடிய போலீஸாரின் எண்ணிக்கை சுமார் 200 ஆவது இருக்கும் என ' ஸ்வாத் ' மாவட்ட உயர்போலீஸ் அதிகாரி வக்ஃப் கான் தெரிவித்தார்.
இந்நிலையில் , இவ்வாறு நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் இருக்கும் போலீஸ்காரர்களில் முதல் கட்டமாக 50 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.