பூட்டான் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஜிக்மி ஒய் தின்லே, பதவியேற்றதை தொடர்ந்து முதன்முதலாக செல்லும் நாடு இந்தியாவாக இருக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
பூட்டானில் இடம்பெற்று வந்த மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அந்நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 24சும் திகதி தேர்தல் இடம்பெற்றது. இத்தேர்தலில் டிரக் புயின்சம் ஷோக்பா கட்சி, மொத்தமுள்ள 47 இடங்களில் 44 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஜிக்மி ஒய் தின்லே, புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பூட்டானில் ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நான் பதவியேற்றதை தொடர்ந்து முதன் முதலாக செல்லும் நாடு இந்தியாவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவும், பூட்டான் நீண்டகால நட்பு நாடுகளாகவும், இருதரப்பு நலனை கருத்தில்கொண்டும் செயல்படுகின்றன. பூட்டானில் அமைந்துள்ள, புதிய அரசும் அதே நட்புறவை கடைபிடிக்கும். மக்களின் தேவையை அறித்து செயல்படுவதில் எனது அரசு கவனமாக இருக்கும். ஊழலை ஒழிப்பதற்காகவே இந்த பொறுப்பை ஏற்றுள்ளோம் என்பதை மறக்கமாட்டோம். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.