பெண்கள் தனியாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதை மட்டுப்படுத்த மலேசிய அரசு முன்வைத்துள்ள திட்டத்துக்கு எதிராக மலேசிய மகளிர் அமைப்புக்கள் கோபமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
பெண்கள் தனியாக வெளிநாடுகளுக்குப் போவதென்றால் அவர்கள் தமது குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது பணி செய்யும் நிறுவனத்திடமிருந்தோ எழுத்து மூலம் இணக்கம் பெற்றிருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வர ஆலோசித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சரான ரய்ஸ் யதிம் அவர்களை மேற்கோள் காட்டி மலேசிய அரசுச் செய்தி நிறுவனம் அறிவித்திருந்தது.
குற்றச்செயல்களைத் தடுப்பதற்காகவே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர யோசிக்கப்படுகிறது என்றும், போதைப் பொருள்களைக் கடத்திச் செல்வதற்காகக் கிரிமினல் கும்பல்கள் பெண்களைப் பயன்படுத்துவதைத் தொடாந்தே இவ்வாறு ஆலோசிக்கப்படுகிறது என மலேசிய அரசு செய்தி நிறுவனம் விளக்கியுள்ளது. இதை ஒரு பிற்போக்கான அடக்குமுறைத் தனம் என மலேசிய மகளிரமைப்புகள் கண்டித்துள்ளன.