இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே இந்த ஆண்டு முடிவுக்குள் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்புள்ளது என்றே அமெரிக்கா கருதுகிறது என அமெரிக்க அரசுத்துறை செயலர் கண்டலீஸா ரைஸ் அவர்கள் கூறியுள்ளார்.
பாலஸ்த்தீன அதிபர் முகமது அப்பாஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை கண்டு பேசிய பிறகு மேற்குக்கரையின் ரமல்லா நகரில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பாலஸ்த்தீன தேசத்தை உருவாக்க நேரம் கனிந்து விட்டது என்றே அதிபர் புஷ் இன்னமும் கருதுகிறார் என்றும் ஆனால் மேற்குக்கரைப் பகுதியல் தொடருகின்ற இஸ்ரேலியக் குடியிருப்பு வேலைகள் தான் பிரச்சனையாக உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
அதிபர் புஷ் தமது ஆட்சிக் காலம் அடுத்த ஜனவரியில் முடிவதற்குள் அமைதி உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் அவர் கடந்த நவம்பரில் அனாப்போலிஸ் நகரத்தில் முன்னின்று நடத்திய பெரிய மத்திய கிழக்கு அமைதி மாநாடில் தொடங்கிய புதிய அமைதி முயற்சிகள் போதிய முன்னேற்றம் காணவில்லை என்றே கருதப்படுகிறது.