அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக பசுபிக் பிராந்தியமான குவாமில் இடம்பெற்ற ஜனநாயக கட்சியினரின் வாக்கெடுப்பில், பாரக் ஒபமா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாக்கெடுப்பில் தனது ஜனநாயகக் கட்சி எதிராளியான ஹிலாரி கிளின்டனை விட 7 வாக்குகளை மட்டுமே ஒபமா அதிகமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிய பிராந்தியமான குவாமானது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இறுதியாகத் தெரிவு செய்வதில் பங்கேற்கவுள்ள 4 பிரதிநிதிகளை மட்டுமே வழங்குகிறது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் எவரும் குவாமில் நேரடியாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குவாம் மக்கள் அமெரிக்க பிரஜைகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள போதும், இறுதிக்கட்ட ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாரக் ஒபமாவும் ஹிலாரி கிளின்டனும் நாளை செவ்வாய்க்கிழமை இன்டியானாவிலும் வட கரோலினாவிலும் இடம்பெறவுள்ள வாக்கெடுப்புகள் தொடர்பில் மும்முரமாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாநிலங்கள், வாக்குகள் மற்றும் பிரதிநிதிகள் அடிப்படையில் பாரக் ஒபமா, ஹிலாரி கிளின்டனை விட முன்னணியில் உள்ளார்.