உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு இந்தியர்களின் உணவுப் பழக்கம் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியதைத் தொடர்ந்து, தற்போது எரிப்பொருட் களின் விலை உயர்வுக்கும் இந்தியா தான் காரணம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
.
உலக அளவில் உணவுப் பொருட் களின் விலை உயர்ந்து வருவதற்கு இந்தியர்களின் மாறி வரும் உணவுப் பழக்க வழக்கங்கள் தான் காரணம் என்று அண்மையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருந்தார். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜார்ஜ் புஷ் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியாவிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
புஷ்ஷின் கருத்தால் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மறையாத நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை இந்தியா மீது அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் எரிப்பொருட்களின் விலை உயர்ந்துவருவதற்கு சீனாவிலும், இந்தியாவிலும் அவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதும் ஒரு காரணம் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.
இது பற்றி வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ஸ்காட் ஸ்டான்செல் கூறுகையில், "உலக அளவில் எண்ணெய்க்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா, சீனா போன்ற பல முன்னேறும் நாடுகளுக்கு அதிக அளவில் எண்ணெய்க்கான தேவைகள் உள்ளன. இதன் காரணமாக அவற்றின் விலை உயர்கின்றன' என்று தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெயின் விலை 120 அமெரிக்க டாலரை எட்டியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது ஸ்டான்செல் இவ்வாறு கூறினார்.
விளக்கம்
உணவுப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக புஷ் கூறிய கருத்தால் இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறித்தும் ஸ்டான்செலிடம் கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பல நாடுகள் முன்னேறி வருவது நல்ல விஷயம். இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது' என்று கூறினார். ஆயினும் அவர் அமெரிக்க அதிபரின் கருத்து குறித்து நேரடியாக எதுவும் சொல்லவில்லை. அத்துடன் புஷ்ஷின் கருத்தில் இருந்து அவர் பின்வாங்கவுமில்லை.