சுவிற்சர்லாந்தில் உள்நாட்டில் பொது மக்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் 2007 ம் ஆண்டில் அதிகரித்து காணப்பட்டதாக பொதுமக்கள் உள்நாட்டு பாதுகாப்பிற்கான அறிக்கை தெரிவித்துள்ளதை அமைச்சரவை கவனத்திலெடுத்துள்ளது.
நேற்று செவ்வாயன்று கூடிய கூட்டாட்சி அமைச்சரவை இவ்விடயம் தொடர்பாக தாம் மிகவும் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 2007 ம் ஆண்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களும் பயங்கரவாத அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதையும் அமைச்சரவை சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிரவாதம், வன்முறைகள் ஆகியவை பொது உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்துவதாக தெரிவித்துள்ள ஆய்வுகள் இதற்கு முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2007 ல் வன்முறை, சட்டவிரோத ஆயுத விற்பனை ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட வன்முறைகள் விளையாட்டுபோட்டிகளின் போது நடைபெற்றுள்ளது.
இஸ்லாமின் அச்சுறுத்தல்
அரச அறிக்கைகளின் படி பயங்கரவாதமும் ஒரு குறிப்பிடப்பட்ட ஒழுங்கமைக்கபட்ட வன்முறையும் சுவிற்சர்லாந்தின் உள்நாட்டு பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குளாக்கியுள்ளது.
சுவிற்சர்லாந்தை தளமாக கொண்டு செயற்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அமைப்புக்கள் இங்கிருந்து பரப்புரை நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதும், நிதி கையாளுகை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் உள்நாட்டில் வன்முறைகள் வளர்க்கும் ஆற்றல் கொண்டது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதல்கள்
தற்போதைய நிலையில் உள்நாட்டில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான தயாரிப்பு வேலைகள் நடைபெறுவதற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும், சுவிற்சர்லாந்து மேற்குலகின் ஒரு அங்கம். எனவே தாக்குதல் அபாயத்தை நாம் எதிர்நோக்கவேண்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை என்று கூட்டாட்சி காவற்துறைப் பேச்சாளர் கான்ஸ் ஊர்லிஹ் தெரிவித்தார்.