கடந்த வாரம் மியான்மரை தாக்கிய நர்கீஸ் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது.
தலைநகர் யாங்கூன் மற்றும் அருகில் உள்ள தீவுகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்நாட்டு நெற்களஞ்சியமான இர்ரவாடி டெல்டா பகுதிகள சின்னாபின்னமாகின. பொகாலே என்ற நகரமே அடியோடு அழிந்துபோனது.
முதலில் 4000மாக இருந்த இறந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, காணாமல் போன 60,000ம் பேரின் கதி என்னாயிற்று என்று தெரியவில்லை.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குள் மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் மியான்மர் நாட்டுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. பிளாஸ்டிக் ஷீட்கள், தண்ணீரை சுத்தமாக்கும் மருந்துகள், சமையல் கருவிகள், கொசு வலைகள், சுகாதார கருவிகள், உணவு, மருந்து, போர்வைகள், உடைகள் போன்ற அத்யாவசிய பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக யாங்கூனில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது