யாங்கூன்: நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டுக்கு நிவாரண உதவிகளை ஐநா சபை நிறுத்தி வைத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நர்கீஸ் புயல் கடந்த வாரம் மியான்மர் நாட்டை மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் கடுமையாகத் தாக்கியது. இதில் 1 லட்சத்துக்கும் மேல் மக்கள் பலியாயினர். 40,000 பேரின் கதி என்னாயிற்று என்றே தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆபரேஷன் சஹாயத் என்ற நடவடிக்கை பெயரில் 2 போர்க்கப்பல்களிலும், 2 ராணுவ விமானங்களிலும் உணவு, தங்கும் கூடாரங்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பியது.
ஏராளமான உலக நாடுகளும் உதவ முன்வந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐநா சபை உணவுப்பொருள்களை அனுப்பி வைத்தது.
இந்த பொருள்களை மக்களுக்கு விநியோகிக்க விடாமல் மியான்மர் ராணுவ அரசு அவற்றை கைப்பற்றி முடக்கி வைத்தது. அத்துடன் நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதற்கு வெளிநாட்டினருக்கும் அனுமதி மறுத்துவிட்டது.
இதனால் ஐநா சபை மேற்கொண்டு உணவுப்பொருள்களை அந்த நாட்டுக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.