சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் தங்கள் நாட்டில் பதுங்கியிருக்கவில்லை என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி அகமத் முக்தார் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் பழங்குடியின பகுதியில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் அடிக்கடி கூறிவருவதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், அதே சமயம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியையொட்டியுள்ள அனைத்து இடங்களையும் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்பதை தாம் ஒத்துக் கொள்வதாகவும் கூறினார்.
இருப்பினும் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் அல் - காய்தா தீவிரவாதிகள் அனைவரையும் பிடிப்பதற்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.