தென்மேற்கு சீன மாகாணமான Sichuan இல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக ரொயிற்றர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 7.8 றிஹ்ரர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதாகவும் ஏற்பட்ட முழுமையான மேலதிக சேதவிபரங்கள் உடனடியாக தெரியவில்லையெனினும் 900 திற்கு மேற்பட்ட மாணவர்கள் புதையுண்டிருக்காலாம் என சி.என்.என் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாகாண தலைநகரமான Chengdu என்னும் நகரின் வடமேற்காக 92 கிலோமீற்றரில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன. உயர் கல்லூரி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் மேற்படி மாணவர்கள் புதையுண்டிருப்பதாக தெரிவித்த செய்திகள் அம்மாணவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்களா என்பதை தெரிவிக்கவில்லை. சீனாவில் கடந்த 32 வருடங்களில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவென்று கூறப்பட்டுள்ளது.
மூன்று நிமிடம் தாம் நிலஅதிர்வை தொடர்ச்சியாக உணர்ந்தாகவும் உடனடியாக எல்லா உத்தியோகத்தர்களும் கீழ்மாடியை நோக்கி விரைந்த்தாகவும் Chengdu நகர அலுவலகப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்நகரத்தில் இருந்து மிகவும் அதிக தூரத்தில் உள்ள பாங்கொக், வியட்நாம் ஆகியவற்றிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கன்றன.
தற்போது வெளிவரும் செய்திகளின் படி 7600 திற்கு மேற்பட்டடோர் பலியாகி உள்ளதாகவும் 10000 திற்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளாகி உள்ளதாகவும் அறியப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.