ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேசம், இந்தச் சம்பவத்துக்கு தமது நாட்டைச் சேர்ந்த ஹர்கத் - உல் ஜிகாத் - இ - இஸ்லாமி (ஹ்யூஜி) இயக்கத்தினர் காரணம் என அவசரப்பட்டு குற்றம்சாட்ட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, வங்கதேச இடைக்கால அமைச்சரவையின் வெளியுறவு விவகார ஆலோசகர் இஃப்திகார் அகமது சவுத்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரக்கமற்ற, வெட்கக் கேடான இந்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஹ்யூஜி தீவிரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருப்பதாக, இந்திய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்திகள் குறித்து அவர் குறிப்பிடுகையில், முழுமையான விசாரணையை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே ஒரு முடிவுக்கு தாவக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு வங்கதேசம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட அவர், கொடுமையாகவும் கீழ்த்தரமாகவும் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் எவ்வித எல்லையையும் கொண்டிருப்பதில்லை என்று கூறியுள்ளார்.