நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களின், எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. வழிநெடுகிலும், உணவுப் பொருட்களை எதிர்பார்த்து, ஏராளமானோர் கையேந்தி நிற்கும் காட்சி, காண்போரின் கண்களை குளமாக்குகிறது. மியான்மரில் கோர தாண்டவமாடிய நர்கீஸ் புயலுக்கு, ஏராளமானோர் பலியாகி விட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆயிரக்கணக்கானோர், உணவு, உடை, வசிப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் இல்லாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.
நிவாரண பணிகளை மேற்கொள்ள, அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் முன்வந்த போதும், அந்நாட்டு ராணுவ அரசு, அதை ஏற்க மறுத்துவிட்டது. கடும் கட்டுப்பாடுகளுடன், ஒரு சில நாடுகள் மட்டுமே, நிவாரண பணிகளை செய்து வருகின்றன. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன. உடைகள் இல்லாமல், ஏராளமான மக்கள், பலத்த மழைக்கு மத்தியில், உணவுப் பொருட்களை எதிர்பார்த்து, சாலையோரத்தில் வரிசையாக காத்திருக்கின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள், அவர்களை கடந்து செல்லும்போது, உணவுப் பொருட்களுக்காக, அவர்கள் கையேந்தி நிற்கும் காட்சி, பரிதாபமாக உள்ளது.
புயலால் இறந்த பலரின் உடல்கள், அப்புறப்படுத்தப்படாமல், அழுகிய நிலையில் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை முடித்துவிட்டு திரும்பும், வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம், மியான்மர் ராணுவ வீரர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அவர்களிடமிருந்து, கேமராக்களை பறித்துக் கொண்டு, எச்சரித்து அனுப்புகின்றனர்.