காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படுவதற்கான சூழல் கனிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
எகிப்தில் நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார அமைப்பு கூட்டத்தையொட்டி, அதில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியை, புஷ் தனியாக சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மேற்கூறிய கூட்டத்தில் பேசிய புஷ், காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்றும், அதற்கான சூழல் கனிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான் உறவில் மிகப்பெரிய மற்றும் முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளதை தாம் கண்டுள்ளதாக கூறிய புஷ், அது குறித்து மேலும் விரிவாக எதுவும் கூறவில்லை.
காஷ்மீர் குறித்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தையில் ஏராளமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் புஷ் தெரிவித்தார்.
இத்தகவலை பாகிஸ்தான் உயரதிகாரிகள் தெரிவித்ததாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.