யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாமனிதர் ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் நினைவு வணக்கக்கூட்டம் இன்றுமாலை 5.00 மணிக்கு கிளிநொச்சி
ஊடகஇல்லத்தில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகஇல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தலைவர் வே.தவச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஊடகவியலாளர் விவேக் ஏற்றிவைக்க, மலர்மாலையினை விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.திலீபன் அவர்கள் அணிவித்தார்.
தொடர்ந்து மலர்வணக்கத்தை பொது அமைப்புக்களின் யாழ்மாவட்டச் செயலாளர் ப.கனகலிங்கம் ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.
இதனையடுத்து நினைவுரைகளை விடுதலைப்புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப்பொறுப்பாளர் திரு.சி.எழிலன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் விடுதலைப்போராட்டம் வீச்சுப்பெற சிவராம் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்.
அத்துடன் தமிழ்த்தேசியத்தை முழுமையாக ஏற்று விடுதலைக்கான பயணத்தை வீச்சுடன் முன்னெடுக்க இவர் உழைத்தமையால்தான் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் மாமனிதர் என்ற உன்னத கௌரவத்தை இவருக்கு அழைத்திருந்தார்.
ஊடகவியலாளர்களிற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த சிவராம் அவர்கள் விடுதலைப்போராட்டத்தின் சரிபிழைகளை அவ்வப்போது எம்மோடு பகிர்ததுடன் நிற்காமல் எமது போராட்டம் சார்ந்த கொள்கை நிலைப்பாடுகளை சர்வதேச இராஜதந்திரிகள் வரைக்கும் தெளிவாக எடுத்துரைத்து எமது விடுதலைப்போராட்டத்தை சர்வதேச அரங்கில் தெளிவோடு எடுத்துக்கூறியதால் ஆத்திரம் அடைந்த எதிரியால் அழிக்கப்பட்டார்.
என அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர் இறைவன், கருணாகரன், சத்தியமூர்த்தி, கனகலிங்கம், ஆகியோரும் நினைவுரைகளை ஆற்றினர்.