கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் கலை பண்பாட்டுக்கழகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் "சங்கநாதம்" ஒளிப்பேழை 2 ஆம் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பணி முதல்வர் பொன் தியாகம் ஏற்றினார்.
தமிழீழத் தேசிக்கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுவப்படத்திற்கு துணைவியார் இசைச்செல்வி சுடரேற்றி மலர்மாலை சூட்டினார்.
மகளிர் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் வசந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, மகளிர் திட்டமிடலுக்கும் மேம்பாட்டுக்குமான பொறுப்பாளர் தமிழினி, புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஆகியோர் நிகழ்த்தினர்.
"சங்கநாதம்" ஒளிப்பேழையினை பா.நடேசன் வெளியிட, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் துணைவியார் இசைச்செல்வி பெற்றுக்கொண்டார்.
கலைஞர்களுக்கான மதிப்பளிப்பினை பா.நடேசன் மற்றும் மாவீரர் பணிமனைப் பணி முதல்வர் பொன் தியாகம் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் பா. நடேசன் ஆற்றிய சிறப்புரை:
மகளிர் கலை பண்பாட்டுக் கழகம் 15 ஆண்டுகளை நிறைவு செய்தது என்பது மகிழ்வுக்கு உரியது.
எமது விடுதலைப் போராட்டத்துடன் மக்களை கருத்தியல் ரீதியாக அணிதிரட்டுவதில் மகளிர் கலை பண்பாட்டுக்கழகம் செயற்பட்டு வந்திருக்கின்றது. கிராமம் கிராமமாக சென்று விடுதலை உணர்வு, தேச உணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் மகளிர் கலை, பண்பாட்டுக்கழகம் ஈடுபட்டு வந்திருக்கின்றது.
எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய மக்கள் அணியை அணிதிரட்டுவதில் மகளிர் கலை பண்பாட்டுக்கழகத்தின் பங்கு அளப்பரியது.
விடுதலைப் போராட்டத்தில் மக்களை போராட்டப் பங்காளியாக்குவது என்பது ஒரு நெருக்கடியான சூழலில் இலகுவான காரியம் அல்ல.
பொருண்மிய நெருக்கடி மற்றும் வளப்பற்றாக்குறைகள் போன்ற இடர்களுக்கு மத்தியில் கலைப்பயணம் மேற்கொள்வது என்பது இலகுவான விடயம் அல்ல.
எமது விடுதலைப் போரட்டத்தில் கலைஞர்களும், போராளிகளும் சமனான பணிகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாகவே போர்க்களங்களில் கலைஞர்களால் ஆற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வான் தாக்குதல்கள் மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு மத்தியில் மக்களை அணிதிரட்டுதில் மகளிர் கலை பண்பாட்டுக்கழகம் ஈடுபட்டிருக்கின்றது.
ஒரு தேசம் மொழி, கலை, பண்பாடுகளால் பலம் அடையும் போது விடுதலைப் போராட்டம் பலம் பெறுகின்றது.
தமிழர்களின் கலைகளையும் பண்பாடுகளையும் சிதைக்க வேண்டும் என்பதற்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்களப் பேரினவாதம் முயற்சித்து வருகின்றது.
அதில் ஒரு போதும் சிங்களப் பேரினவாதம் வெற்றிபெறப் போவதில்லை.
கலை ஞானம் இல்லாத ஒரு இனத்திடம் விடுதலை உணர்வு பிறக்காது.
தமிழர்களின் கலை பண்பாடுகள் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே எமது தேசியத் தலைவர் பல கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளார்.
இன்றைய மதிப்பளிப்பால் எமது தலைவர் மகிழ்வு அடைவார்.
எமது புலம்பெயர் மக்களின் உறவு இணைப்புப் பாலமாக கலைகள் விளங்குகின்றன என்றார் பா.நடேசன்.