வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ரொறன்ரோ கீழ் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பாக இடம் பெற்றது. அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார். அருட்தந்தை பாக்கியறஞ்சித் அடிகளார், அருட்தந்தை சம்சன் என்.எதிரிசிங்க அடிகளார் ஆகியோரின் படுகொலைகளுக்கும் இந்நிகழ்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடும் குளிர், மழை, வேலை நாள் ஆகியவற்றினையும் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு கண்டனத்தையும்,எதிர்ப்பையும் உரத்த குரலில் தெரிவித்தனர்.
கருணாரட்ணம் அடிகளார் மற்றும் மூன்று குருமார்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட செய்தியையும் மடு மாதா கோயில் எறிகணைத் தாக்குதலில் சேதப்படுத்தப்பட்ட படம், புனித ஆலய வளாகத்தில் சீருடையில் படையினர் நிற்கும் படம் மற்றும் ஆலய வளாகத்தை அண்டிய நிலப்பரப்பு அமைதி வலயமாக அறிவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் ஆர்ப்பாட்டகாரர்களால் கனடிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கனடிய தமிழ் கத்தோலிக்க மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆதரவு வழங்கியது.