2008ம் ஆண்டுக்கான குறும்படப்போட்டி நிகழ்வு ஒன்று, பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்படவுள்ளது.
லெப். கேணல் தவம் நினைவு விருது குறும்படப்போட்டிக்கான தொடக்க விழா 26.04.08 அன்று பாரிசில் நடைபெற்றது. இவ்விழாவில் லெப். கேணல் தவம் அவர்களின் உருவப்படத்திற்கு ஈகச்சுடரினை மாவீரர் அகமகன் அவர்களின் தாயார் ஏற்றி வைத்தார்.
பாரிசின் முன்னணிக் கலைஞர்கள் கலந்துகொண்ட இச்சிறப்பு ஒன்றுகூடலின்போது, தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் இப்போட்டி தொடர்பான ஊடகங்களுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டது. இப்போட்டி தொடர்பான அறிமுக உரையினை 1995ம் ஆண்டுக்காலகட்டத்தில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த திரு.மாணி நாகேஸ் அவர்கள் வழங்கினார.; மேலும் இந்நிகழ்வில் சிறப்புரைகளை திரு. சுபாஸ், திரு. கிபி. அரவிந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் இறுதியில் லெப். கேணல் தவம் அவர்கள் பற்றிய ஒளித்தூரிகை எனும் காணொளி விவரணம் காண்பிக்கப்பட்டது.
நீண்டகால இடைவெளியின் பின், தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தால், மீளவும், இக்குறும்படப்போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறும்படக் கலைஞர்களை உற்சாகத்தில் ஆழ்தியுள்ளது. வருடாவருடம் தொடரவுள்ள இப்போட்டியில், வெற்றிபெறும் படைப்பாளிகளுக்கு லெப். கேணல் தவம் நினைவு விருதுடன், பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.