2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் நடைபெற்ற லெப். கேணல் வைகுந்தனின் வீரவணக்க நிகழ்வில் உரை நிகழ்த்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
1998 ஆம் ஆண்டு காலத்தில் லெப். கேணல் வைகுந்தன் கனரக ஆயுதச் சூட்டாளராக திறமையாகச் செயற்பட்டார்.
2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படை எம்.ஜ உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியதிலும் திறம்படச் செயற்பட்டவர்.
2001 இல் கடற்புலிகள் அணியில் இணைந்து பயிற்சி எடுத்து கனரக ஆயுதப் பயன்பாட்டுக்கு பொறுப்பாக இருந்ததோடு கடற்புலிகளின் தாக்குதல்களில் மிகவும் திறமையாகச் செயற்பட்டார்.
இவரது கனரக சூட்டுப்பிரிவில் பல திறமையான போராளிகளை அவர் உருவாக்கினார்.
சிறிலங்காப் படையின் டோறாக்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவங்களில் மிகவும் திறமையாக செயற்பட்ட இவர், சமாதான காலத்தில் மன்னார், திருகோணமலைப் பகுதிகளில் மிகவும் திறமையாக செயற்பட்டவர் என்றார் அவர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்புலிகளின் கனரக படைக்கல முதன்மை ஆசிரியர் அனந்தன் கூறியதாவது:
சிறிலங்காவின் போர் வானூர்திகளுக்கு எதிரான தாக்குதல்களில் சிறந்த சூட்டாளனாக மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஒரு போராளி லெப்.கேணல் வைகுந்தன்.
மிகவும் நெருக்கடியான சூழலில் எல்லாம் கடல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்ட ஒரு வீரன்.
எமது மண் விடுதலை பெறவேண்டும் என்ற கனவுடன் பல புதிய திறமைமிக்க போராளிகளை உருவாக்குவதில் அயராது உழைத்தவர் என்றார்.
புதுக்குடியிருப்பு வணிகர் கழகத் தலைவர் செல்வச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்ற, ஈகைச்சுடரேற்றி, மலர்மாலையினை துணைவியார் சூட்டினார்.
வீரவணக்க உரைகளை கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன், கடற்புலிகளின் கனரக படைக்கல முதன்மை ஆசிரியர் அனந்தன், கடற்புலிகளின் மகளிர் தளபதி எழிலி ஆகியோர் ஆற்றினர்.
வீரவணக்க உரைகளைத் தொடர்ந்து லெப். கேணல் வைகுந்தனின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப் படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
கடந்த 11 ஆம் நாள் லெப். கேணல் வைகுந்தன் வீரச்சாவைத் தழுவினார்.