சுவிஸ் வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் 2007ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராத சாதரணப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதல் பத்துஇடங்களுக்குள் தம் திறமையை வெளிக்காட்டிய தமிழ்ப் பிரதேச மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்டத்தில் யாழ் மத்திய கல்லூரியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காரதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் இன்று நடைபெற்றன.
இந் நிகழ்வில் அகில இலங்கை ரீதியாக தேசிய நிலையில் முதல் நிலையைப் பெற்ற மட்டக்களப்பு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவி சாளினி சந்திரசேகரத்திற்கு ஒரு இலட்சம் ரூபா பணவைப்புச் சான்றிதழும், 10 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்று யாழ் மத்திய கல்லூரிக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களான உதயகுமார் விஜித், நவரட்ணம் துஷிகேசன் ஆகியோருக்கும், தேசியநிலையில் முதல் 10 இடங்களுக்குள் தம் திறமையை வெளிப்படுத்திய யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களான குகானந்தன் நிரூஜன், நரேந்திரன் திருத்தணிகன், வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளான ருக்சியா சந்திரபோஸ், சுமங்கலி சிவகுமார், தாரணி சுந்தரம், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவன் ஆனந்தலிங்கம் நிதர்சன் ஆகியோருக்கும் தலா இருபதாயிரம் ரூபா பணப் பரிசில்களும், வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்த யாழ் மத்திய கல்லூரி துடுப்பெடுத்தாட்ட அணி வீரர்கள், பயிற்றுனர், மற்றும் மைதான உதவியாளர் ஆகியோருக்கு தலா ஐயாயிரம் ரூபா பணப்பரிசில்களும் வழங்கி மதிப்பளிப்பட்டது.
இது தொடர்பாக யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் - சுவிஸ்சர்லாந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இம் மாணவர்களின் அதிஉயர் பெறுபேறுகளிற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்த மதிப்பிற்குரிய அதிபர்கள், உபஅதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதுடன் அதிவிசேட சித்திகளைப் பெறும் முதன்மை நிலை மாணவர்களையும் கடந்த பல வருடங்களாக மதிப்பளித்து ஊக்கமளித்து வருகின்றது. அதன் அடிப்படையில் இன்றைய இந் நிகழ்வுகள் யாழ் மத்திய கல்லூரியிலும், மட்டக்களப்பு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
யாழ் மத்திய கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெறும் இன்றைய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு.வே. செல்வரட்ணம் அவர்களும், மட்டக்களப்பு காரதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சகாதேவராஜா, காரதீவு பிரதேச செயலர் திரு. இராமகிருஸ்னன் அவர்களும் மற்றும் ஏனைய கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் பெருந்தன்மையுடன் கலந்து சிறப்பிப்பது எமக்குப் பெருமையளிப்பதுடன் தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நீங்கள் அனைவரும் கொண்டுள்ள அளப்பெரும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையுமே எடுத்துக்காட்டி நிற்கின்றது.
தமிழ் மாணவர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளில் வாழ்ந்தும் அவர்களுடைய அயராத முயற்சிகளினால் அவர்களுடைய கல்விப்பெறுபேறுகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இம் மாணவர்கள் தான் நாளைய தலைசிறந்த கல்வியாளர்களாக தமிழ் இனத்திற்கும் தாங்கள் கல்விகற்ற கல்லூரிக்கும் பெருமை சேர்த்துக் கொள்ள இருக்கிறார்கள். எனவே இம் மாணவர்கள் அறிவியல் துறையில் ஏற்பட்டிருக்கின்ற ஏற்ற இறக்கங்களை நன்கு அறிந்து அதற்கேற்ற வகையில் தொடர்ந்து வரும் காலங்களிலும் சிறப்பாகக் கற்று இரண்டு வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையிலும் அனைத்துப்பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென வாழ்த்துகின்றோம்.
காலம் காலமாக தனக்கென ஒரு தனியான இடத்தைப்பெற்று தேசிய அளவில் உயர்மட்ட அடைவுகளுடன் துரிதமாகவும்ää நிதானமாகவும் கல்வி வளர்ச்சியில் ஆழமான பங்களிப்பை ஏற்படுத்தி வரும் எமது சகோதர பாடசாலையாகிய வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து இவ்வருடம் 22 மாணவர்கள் 10 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்றிருப்பது பெருமையளிக்கிறது. இச் சந்தர்ப்பத்தில் இம் மாணவர்களையும் எமது சங்கத்தின் சார்பில் வாழ்த்துவதுடன் அதிவிசேட சித்திகளைப் பெற்றுக் கொண்ட ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பெருமைக்குரிய கடந்த காலங்களைக் கொண்டிருக்கிறது. கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுத்துறையிலும் யாழ் மத்திய கல்லூரி நன்கு வளர்ச்சியடைந்திருப்பதை துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் பெற்றுக் கொண்ட மாபெரும் வெற்றி மூலமாக உணரக்கூடியதாக இருக்கிறது. கல்வியை அலட்சியப்படுத்திக் கொள்ளாமல் விளையாட்டுத் துறையும் சர்வதேச அளவிற்கு வளர்த்தெடுக்கப்பட வேண்டுமெனவும் உலக வரலாற்றுப் புகழ்மிக்க விளையாட்டு வீரனும், யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவனுமான கலாநிதி எதிர்வீரசிங்கத்தைப்போல பல விளையாட்டு வீரர்கள் உலக அளவில் உருவாக வேண்டுமெனவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைய இந்நிகழ்வினை சிறப்பாக ஒழுங்குபடுத்திய எமது கல்லூரி அதிபர் ஆசிரியர்களிற்கும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்ற அனைவருக்கும் சுவிஸ் வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து வரும் காலங்களிலும் தமிழ் மாணவர்களை ஊக்கமளிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எமது சங்கம் முன்னெடுக்கும் எனவும் தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வியை மிகச் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.