அனைவருக்கும் சமத்துவமாக கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பெருவிருப்பு கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வில் சித்தி எய்திய மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தமிழ் மாணவர்களின் கல்வியை சிங்கள அரசு அழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.
ஆனால் எமது போராட்டம் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் உயரிய திட்டங்களுடன் மாணவர்களின் கல்வியை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நகர, கிராம மாணவர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் பெரு விருப்பமாகும்.
தலைவரின் எண்ணங்களுக்கு அமைவாக மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்கு நாமும் செயற்பட்டு வருகின்றோம்.
ஆனால் சிறிலங்கா அரசானது தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைத்து விடுதலைப் போராட்டத்திலிருந்து இளைய தலைமுறையை விலக்கி வைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றது.
அதற்காக பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
சிங்கள அரசின் தடைகளை தகர்த்து எறிந்து மாணவர்கள் கல்விப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும். போர்ச் சூழலை நாம் காரணங்களாக கூறிக்கொண்டிருக்க முடியாது.
நம்பிக்கையுடன் கல்வியில் மாணவர்கள் அக்கறை செலுத்தி முன்னேற வேண்டும்
அதற்காக எமது விடுதலை அமைப்பு, மாணவர் அமைப்பின் ஊடாக சாந்தி, தேவன், மாறன் போன்ற பல இல்லங்கள் ஊடாக கல்விக்கு பெரும் பங்காற்றி வருகின்றது என்றார் பா.நடேசன்.
மாணவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு முற்பகல் 9:00 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை மாணவர் அமைப்பைச் சேர்ந்த வீரமணி ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றினார்.
தியாகி பொன். சிவகுமாரனின் திருவுருவப் படத்திற்கு மாணவர் அமைப்பைச் சேர்ந்த எழிலன்பன் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார்.
மேஜர் முரளியின் திருவுருவப்படத்திற்கு பல்கலைக்கழக மாணவி நதியா விவேகானந்தன் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார்.
நதியா விவேகானந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
மாணவர்களுக்கான மதிப்பளிப்பினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், செ.கஜேந்திரன், புனித திரேசா பெண்கள் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம், த.குருகுலராஜா, தமிழீழ கல்விக் கழக துணைப் பொறுப்பாளர் புலிமறவன், தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் ஆகியோர் வழங்கினர்.