மே 8 செஞ்சிலுவை தினமான நேற்று இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினரால் செஞ்சிலுவை தின நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டது.
பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையின் கௌரவ செயலாளர் சி.சிறிதரன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் வே.இறைபிள்ளை ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பனவற்றையடுத்து தலைமைஉரை இடம்பெற்றது. அடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட கிளிநொச்சிவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சரவணன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்குப்பணிகள் பற்றி உரையாற்றினார்.
நிகழ்விற்கான ஆசிஉரையினை அன்ரன் அமலதாஸ் அடிகளார் வழங்கியிருந்தார். நிகழ்வின் இடையே இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையின் செஞ்சிலுவைச்சங்கத்தின் செய்திமடல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதனை அரச அதிபர் நா.வேதநாயகன் வெளியிட்டுவைக்க, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக்கலாநிதி சத்திமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். இதன் பிரதிகள் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையில் பணியாற்றி ஒய்வுபெற்றவர்கள் மற்றும் சிறந்த தொண்டர்களுக்கான சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இதில் ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை என்ற முதியவர் சிறந்த தொண்டாற்றியமைக்காக பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். இதில் அவரின் தொண்டைப் பாராட்டி பாராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் விருந்தினர்களாகக் கலந்துகொண்ட நா.வேதநாயகன், சத்தியமூர்த்தி ஆகியோரின் உரைகளும் நேற்றைய நிகழ்வைச் சிறப்பித்தன.
இதேவேளை இலங்கை செஞ்சிலுவைச் சங்க தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்ட கிளையால் நடத்தப்பட்ட 25 கிலோமீற்றர் வீதியோட்டப் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.