அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் 17 பேர் கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பிலான எந்தவொரு விபரங்களையும் தான் இன்றுவரையில் அறிந்திருக்கவில்லை என சம்பவதினத்தன்று மூதூர் பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகள் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன. இதன்போது சிவில் அமைப்பு சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீல் டயஸ் சாட்சியை குறுக்கு விசாரணை செய்தபோதே அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
அக்ஷன் பெய்ம் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேலன், இராணுவத்தரப்பு சட்டத்தரணி கோமின் தயாசிறி அரசதரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி துலிப் ஜயகொடி ஆகியோரும் சாட்சியை குறுக்கு விசாரணை செய்தனர். சாட்சியான பொலிஸ் அதிகாரி மேலும் கூறியதாவது:
மூதூர் நகரப் பாதுகாப்புக்கென 156 ஊர்காவல் படையினரும் 223 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு சோதனைச்சாவடிகள் பலவும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி மூதூரில் மோதல்கள் ஆரம்பித்த அதேவேளை, எம்மிடையேயான தொடர்புகள் அன்றைய தினம் காலை 11.00 மணியளவில் துண்டிக்கப்பட்டிருந்தன.
புலிகளின் மோட்டார் தாக்குதல்களில் நகர பொலிஸ் காவலரண் முற்றாக அழிக்கப்பட்டது. அத்துடன் இந்த தாக்குதல்கள் 2, 3ஆம் திகதிகளிலும் தொடர்ந்த வண்ணமிருந்தன. இதனால் எமது பாதுகாப்பு படையினரில் 6 பேர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயங்களுக்குள்ளாகினர். தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் மூதூர் நகர பொலிஸ் காவலரண் தாக்கப்பட்ட விடயத்தை அங்கு பொறுப்பில் இருந்த பொலிஸ் அதிகாரி சரத் சந்திர மோட்டரோலா ரேடியோ போன் மூலமாகவே தெரிவித்தார். மூதூர் நகரத்தில் தாக்குதலை நடத்திய புலிகள் நகரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம், தொலைத்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடும் நிலவியது. இதன் பின்னர் மூதூர் நகரப்பாதுகாப்புக்கென மூன்றாம் திகதி பி.ப. 2.00 மணியளவில் இராணுவத்தினர் வந்து சேர்ந்தனர். மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வந்த இராணுவத்தினர் 4ஆம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் பொலிஸ் நிலையத்திலிருந்து சென்று விட்டனர்.
முதலாம் திகதி முதல் நான்காம் திகதிவரையில் மூதூரின் நிலைமைகள் மோசமாக இருந்தமையால் அன்றைய தினங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த பொலிஸ் அறிக்கைகள் 5ஆம் திகதியே பதிவு செய்யப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் ஊர்காவல் படையினராக கடமையில் இருந்தவர்களது வீடுகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தன.ஆனாலும் அவர்களை வீடுகளுக்கு செல்ல நான் அனுமதிக்கவில்லை என அக்ஷன் பெய்ம் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேலன் கேட்ட கேள்விகளுக்குப் பதலளித்தார். இதன் பின்னர் சிவில் அமைப்பு சட்டத்தரணி நீல் டயஸின் குறுக்கு விசாரணையின்போது பதிலளிக்கையில், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதுகாப்பு விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தையொன்றுக்காக 2006 ஆகஸ்ட் முதலõம் திகதி திருகோணமலைக்கு சென்றிருந்ததால் அன்றிலிருந்து அவர் மூதூருக்கு திரும்பிய 4ஆம் திகதி வரையில் மூதூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக நான் கடமையேற்றிருந்தேன். மேலும் 2006 பெப்ரவரி 8ஆம் திகதி முதல் மூதூரில் இருந்தமையால் மூதூர் குறித்த போதிய அனுபவமும் எனக்கு இருந்தது. மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவிலேயே அக்ஷன் பெய்ம் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் அமைந்திருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ரோந்து நடவடிக்கைகளின் போது அந்த அலுவலகம் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால் அவ்வலுவலகத்துக்குள் சென்றதில்லை.
மூதூரில் அமைந்துள்ள அக்ஷன் பெய்ம் அலுவலக ஊழியர்கள் கொல்லப்பட்ட விடயம் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாகதெரிந்து கொண்டேன். அது ஆகஸ்ட் நான்காம் திகதிக்குப் பின்னராகும்.அதேவேளை திருகோணமலைக்குச் சென்றிருந்த மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நான்காம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு திரும்பியிருந்தார். அன்றைய தினமே ஊழியர்கள் கொல்லப்பட்டதை தெரிந்து கொண்டிருந்தாலும் அதன் விசாரணை நடவடிக்கைகள் எனது சார்பில் இடம்பெறவில்லை. இவ்விசாரணைகளுக்கென எமது பொலி ஸ் நிலையத்தில் இயங்கும் குற்றத்தடுப்புப்பிரிவு குழு ஒன்றை நியமித்திருந்தது. இருப்பினும் மூதூரில் கொல்லப்பட்ட அக்ஷன் பெய்ம் ஊழியர்கள் தொடர்பில் எந்தவொரு விபரங்களையும் இதுவரையில் நான் அறிந்திருக்கவில்லை என்றார்.
இராணுவத்தரப்பு சட்டத்தரணி கோமின் தயாசிறியின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மூதூரில் அமைந்துள்ள அக்ஷன் பெய்ம் அலுவலகத்தில் தங்கியுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு மற்றும் திருகோணமலை பிரதான அலுவலகங்களில் இருந்து எந்த அறிவிப்பும் எமக்கு வழங்கப்படவில்லை என்றார்.