எமது கலை, பண்பாடுகள் விடுதலை உணர்வுகளை வளர்ப்பவையாக விளங்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழீழ நுண்கலைக் கல்லூரியின் வெளியீடான "கலைவண்ணம்" இரு திங்கள் இதழ் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நெருக்கடியான சூழலில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நூல்கள் வெளிவருவது மகிழ்வைத் தருகின்றது. கலை உணர்வு என்பது அனைவரிடமும் இருக்கின்றது.
இன்று இயந்திரமாகி விட்ட உலகில் எந்த ஒருவரும் நின்று நிதானித்த புன்னகையை சிந்துவதற்கோ, வணக்கம் செலுத்துவதற்கோ நேரம் கிடைப்பதில்லை.
மனித வாழ்வின் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதேவேளையில் கால நதியின் வேக ஓட்டத்திற்கும் மனிதனால் ஈடுகொடுக்க முடியாமல் உள்ளது.
இந்நிலைதான் மனிதர்களுக்குள் ஏற்படுகின்ற பல்வேறு உணர்வுகளின் சமநிலையை குழப்பி விடுகின்றது. இப்படி சமநிலை குழம்பிய மனிதர்கள் துன்பம் சுமந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
கலை என்பது சமநிலையை இழந்து நிற்கின்ற ஒரு மனிதனுக்கு ஒரு மருத்துவம் போன்றது. மனிதர்களை அவர்களின் மனநிலையை பேணுவதில் கலைகள் முதன்மை வகிக்கின்றன.
ஒரு சமூகம் தேசிய இனம் என்று குறிப்பிடப்படுவதற்கும், ஒரு இனம் வளர்ச்சி பெற்ற இனமாக கணிக்கப்படுவதற்கும் அந்த இனத்தின் கலை, பண்பாடு என்பவை முக்கியமானதாக கருதப்படுகின்றன.
எமது தேசத்தில் இவ்வாறான கலைகள் எதிரியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட கடந்த கால வரலாறுகளைக் கொண்டவை. எமது கலைகள், பண்பாடுகள் சிதைக்கப்பட்டதுடன், தமிழ் மக்களின் சமநிலைகளும் எதிரிகளால் குழப்பப்பட்டன.
இவற்றில் இருந்து நாம் மீண்டு எழுந்து எமது வாழ்க்கையை மீட்டு எடுக்கின்ற விடுலைப் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கின்றோம். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகாலத்திலேயே தமிழீழ தேசத்தில் தமிழீழத் தேசியத்தலைவரால் கலைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
எமது தேசியத்தலைவர் கலை என்பது மக்களுக்காக என்று குறிப்பிட்டிருக்கின்றார். தமிழீழ நுண்கலைக் கல்லூரிகளும் தேசியத்தலைவரின் வார்த்தைகளையே மகுடமாகக் கொண்டுள்ளன.
ஆதலால் எமது கலை பண்பாடுகள் விடுதலை உணர்வுகளை வளர்ப்பவையாக விளங்க வேண்டும் என்றார் அவர்.
மல்லாவி நுண்கலைக்கல்லுரி முதல்வர் இசையாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் புனர்வாழ்வுக்கழக உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் நரேனும், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினியும் ஏற்றினர்.
மாவீரர்களின் பொதுத் திருவுருவப் படத்திற்கான ஈகச்சுடரினை தமிழீழ கல்விக்கழக துணைப்பொறுப்பாளர் புலிமறவன் ஏற்ற, மலர்மாலையினை தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் கண்ணன் சூட்டினார்.
வரவேற்புரையிளை முள்ளியவளை நுண்கலைக் கல்லூரி முதல்வர் மணிமொழி கிருபாகரனும், வாழ்த்துரையினை தமிழீழ நுண்கலைக் கல்லூரிப் பொறுப்பாளர் தணிகைமாறனும் நிகழ்த்தினர்.
கருத்துரைகளை இதழாசிரியர் சோ.சி கலைக்கதிர், தேவகாந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.
"கலைவண்ணம்" இதழினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் வெளியிட, முதற்படியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சிறப்புப்படிகள் வழங்கப்பட்டன. "கலைவண்ணம்" நூல் மதிப்பீட்டு உரையினை தர்மபூபதி சிதம்பரநாதன் நிகழ்த்தினார்.